வாசி யோக விளக்கம் 6

கடவுள் -மனிதன் - முக்தி

கடவுள் தத்துவம் உருவானது ஏன் ?கடவுள் யார் அல்லது எது ? பிரபஞ்சம் எப்படி உருவானது? கடவுள் ஏன் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? மனிதன்யார் ? கடவுள் மனிதன் முக்தி -இம்மூன்றின் தொடர்பு என்ன ? 

முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் என்ன ? முக்தியில் பல நிலைகள் உள்ளதா ? முக்தி அடையும் வழி எது ? இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடைகாணமுயன்றேன்.. 

முக்திபற்றி சித்தர்களிடம் நான் கேட்டேன் . அதற்கு அவர்கள் சொன்னதைச் சொல்கிறேன்
முக்தி பற்றி அறிவதற்கு முன் கடவுள் பற்றியும் , மனிதன் பற்றியும் அறியவேண்டும்.

1. கடவுள் கொள்கை
கடவுள் உண்டு என்பார் உண்டு . இல்லை என்பாரும் உண்டு .
1.1 கடவுள் தத்துவம் உருவானது ஏன்?
பார்க்கும் அழகில் இன்பம் . கேட்கும் இசையில் இன்பம். நுகரும் நறுமணத்தில் இன்பம் . உண்பவற்றில் சுவையில் இன்பம். உடல் தொடுகையில் இன்பம் . இவை புலன் இன்பம் .ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புலனுணர்வு சேர்ந்து தருவதில் அதிக இன்பம் பெறுகிறோம் .. இவை ஐந்தும் சேர்ந்து தரும் பெண் இன்பம் அல்லது ஆணின்பம் உச்சமானது . 
இதைத் திருவள்ளுவர் 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்டொடி கண்ணே உள .

திருக்குறள் 1101 .என்றார் 

புறத் தூண்டலால் கிடைக்கும், ஐந்தும் சேர்ந்த இன்பத்தில் கிடைக்கும் உணர்வு என்பது சுக அனுபவம் . நாம் பெற்ற இந்த சுக அனுபவம், மனத்தால் நினைத்தாலே கிடைத்துவிடுகிறது . ஆனால் இது நிலைத்து நிற்பது இல்லை. எனவே சக்தி இருக்கும் வரை மீண்டும் மீண்டும் இந்த புறத் தூண்டலை தேடுகிறோம் . மிருகங்களும் இதைச் செய்கின்றன . . இதுவே உயிர்கள் நிலைத்து இருக்க ஆதாரம் . இதைக் காம சுகம் அல்லது சிற்றின்பம் என்றனர் சித்தர்கள் இதுவே மனிதஇனம் பெருகவும் நிலைத்து இருக்கவும் ஆதாரம் .. . 
ஐந்து புலன்களால் இன்பம் பெறுவது போல் துன்பமும் உயிர்கள் பெறுகின்றன . உயிர்கள் அடையும் துன்பத்தில் பெரும் துன்பம் மரணம் .. உயிர்கள் அனைத்தும் மரணம் உள்பட துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தைத் தேடுகின்றன ... ஆனால் இயற்கை சீற்ற துன்பம் , பிற உயிரினங்கள் கொடுத்த இன்னல் , சக மனிதர்கள் உண்டாக்கிய துன்பங்கள் ஆகியவற்றை மனித சக்தியால் தடுக்க முடியவில்லை .

இதன் காரணத்தை அறிய முற்பட்டான் மனிதன் அதற்கு முதற்படியாக இயற்கையை ஆராய்ந்தான் . மரணத்திற்கு முன்னும் மரணித்தபின்னும் நடப்பது பற்றி அறிய முற்பட்டான். .
அப்பொழுது அவன் அறிந்தது,புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலைகள் உண்டு . அதை புலன்களால் மட்டுமே அறிய முடியாது .. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்க சக்தி என்று ஒன்று உள்ளது என்று உணர்ந்தான் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான்
அந்த சக்தி மனிதனை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் என்று நம்பினான் . மேலும் அதை வணங்கினால் அவனுக்கு துன்பம் நீக்கி இன்பம் தரும் என்று நம்பினான் .. இந்த நம்பிக்கை இன்றுவரை உள்ளது . மரண பயமும் துன்பங்களும், இன்பம் பெறவேண்டும் என்ற ஆசையும் கடவுள் தத்துவத்தை உருவாக்கியவை .. . பயமும் ஆசையும் கடவுள் என்ற தத்துவம் உருவாகக் காரணம் . 

1.2. கடவுள் யார்? 
கடவுள் பற்றி அடிப்படை உண்மைகள் 
மனிதன் தனது விஞ்ஞானமய கோசத்தால் துன்பம் தவிர்த்து நீடித்த நிலையான இன்பம் மட்டும் பெற வழி முறைகள் தேடினான் .. . அப்பொழுது அவன் கண்ட தீர்வு கடவுள் . 

இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் கடவுள் .
எங்கெல்லாம் மனித சக்தி செயல் படுத்த முடியாமல், இயக்கங்கள் சுயமாக நடை பெறுகிறதோ அங்கு செயல்படுகிற சக்தி இறை சக்தி. .. அல்லது இயற்கை சக்தி அல்லது கடவுள் என்று முடிவு செய்தான் . 

கடவுள் சக்தி நேரடியாக செயல் படாமல் பிரபஞ்சம் மூலம் செயல்படுகிறது என்று உணர்ந்தான் . 

இப்பிரபஞ்சம் இன்பமும் தரும் துன்பமும் தரும் . இன்ப துன்பங்களுக்குக் காரணம் அவர் அவர் செயல்கள் . ஆயினும் தீமை செய்யாதவருக்கும் தவிர்க்க முடியாத துன்பம் வருகிறது . துன்பத்தில் இருந்து விடுபட மனிதனுக்கு கிடைக்கும் ஆறுதல் கடவுள் . 

கடவுள் சக்தி அல்லது இயற்கை சக்தி இப்பிரபஞ்சத்தின் மூலம் உயிர்களுக்கு கொடுக்கும் துன்பங்களுள் தவிர்க்க முடியாத பெரும் துன்பம் மரணம் . கடவுளை உணரும் பொருட்டும் தேடும் பொருட்டும் மரணத்தை கொடுத்தான் இறைவன் . 

கடவுளை நாடி மரண துன்பத்தையும் நீக்க முடியும் ... துன்பம் நீங்கி பேர்இன்பம் பெற முடியும் .

தவிர்க்க முடியாத துன்பங்கள், அடைய துடிக்கும் உலக இன்பங்கள், . பேரின்பம் ஆகியவை கடவுள் கொள்கை உருவாக முக்கிய காரணங்கள் . 

1.3. கடவுள் கொள்கைகள் உருவாக்கும் கேள்விகள் 

கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கினாரா?அல்லது கடவுளே பிரபஞ்சமா? கடவுள் பிரபஞ்சத்தை தோற்றுவித்த நோக்கம் என்ன ? அவசியம் என்ன ? இக்கேள்விகள் நெடுங்காலமாக கேட்கப்படுபவை. 

“இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் கடவுள்”. அப்படிஎன்றால் யாரும் பார்த்தறியாத கடவுளுக்கு பிரபபஞ்சத்தை உருவாக்க நோக்கமும் அவசியமும் கூறுவது யாராலும் முடியாது. . பிரபஞ்சத்தை அவர் உருவாக்கினாரா அல்லது அவரே பிரபஞ்சமா?என்பதையும் யாராலும் சொல்லமுடியாது . 
இதை மாணிக்கவாசகர் திரு வாசகத்தில்
” எண்ணுதற்கு எட்டாத எழிலார் கழல் இறைஞ்சி” என்றார் .. 1.4. பிரபஞ்சம் உருவானது எப்படி ? மனிதன் யார் ? கடவுள் – பிரபஞ்சம்-மனிதன் ஆகியவற்றின் தொடர்பு என்ன ? 

விஞ்ஞானமய கோசம் உள்ள மனிதன் , அறிந்ததில் இருந்து அறியாததை உணர்ந்து சொல்லும் வல்லமை கொண்டவன் . கடவுள் பற்றி சித்தர்களும் ஞானிகளும். ரிஷிகளும் , இறை தூதர்களும் தங்களது ஆன்ம சக்தியால் உணர்ந்து சொன்னார்கள் . இதற்கு பத்தாம் அறிவு வேண்டும் என்கிறார் திரு மூலர். இக்கேள்விகளுக்கு திருமூலர் திருமந்திரத்தில் முதல் பாடலில் தெளிவான பதில் சொல்லி உள்ளார் . 

ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள் 
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து 
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் 
சென்றனன் தானிருன் தாணுணர்ந் தெட்டே 

திருமூலர் திருமந்திரம் பாடல் 1 

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள் . அவனது அருளின் காரணமாக . ஓம் என்ற பெருவெடிப்பில் அகாரம் என்ற எதிர்மறை சக்தி துகள்களாகவும் மற்றும் உகாரம் என்றநேர்மறை சக்தி துகள்களாக இரண்டு சக்தி நிலையாக மாறினான் . இதை பிரபஞ்சவாலை என்கிறார் போகர் . இதை காயத்திரி சக்தி என்கிறார் விசுவாமித்திரர். (பார்க்க காயத்திரி மந்திரம் வாலை தியானம் பதிவு ) இதை ஆம் ஊம் என்றார் கருஊரார், இந்த சக்தி துகள்கள் மகாரம் என்ற நடுநிலை துகளாக மூன்றானது . நாதவிந்து என்ற நான்காம் உயிர் துகள் ஆனது . நாதவிந்து என்ற உயிர் துகள் நேர்மறை உயிர்த்துகள் எதிர்மறை உயிர்த்துகள் ஆக பிரிந்தது . எனவே அகார,உகார , மகார நாதவிந்து ஆகிய ஐந்து அடிப்படை துகள்கள் உருவாகின . இந்த ஐந்தை பஞ்சவித்து என்கிறார் அகத்தியர். இந்த பஞ்ச வித்துக்களே பஞ்ச பூதமாகின( மண் ,நீர் , நெருப்பு , காற்று ,ஆகாயம் ) . இந்த பஞ்ச பூதங்கள் பிரபஞ்சமாக உயிர்களாக உருவானது . இந்த உயிர்கள் நால்வகை யோனிகளில் ( பிறப்புவழி ) எழுவகை உயிர்களாக பிறந்தன. இந்த உயிர்களில் ஆறு ஆதாரங்களுடன் 96 தத்துவங்களுடன் ஆதிமனிதன் உருவானான் . . இந்த ஆறு ஆதாரம் பெற்ற மனிதன் இதன் மூலம் கடவுள் கொள்கை உருவாக்கினான் . கடவுளை உணர்ந்தான் .கடவுளை உணர்ந்த பின் கடவுளைத் தொடர்பு கொள்ள முயன்றான். அப்பொழுது அவன் ஏழாவது நிராதாரமாகிய சகஸ்ராரம் என்ற ஆதாரத்திற்குச் சென்றான். அஷ்டாங்க யோகத்தில் எட்டாவது நிலை ஆகிய சமாதி நிலையில் தன்னை இறைவனின் ஒருபகுதி என உணர்ந்து இறைவனுடன் கலந்து இறைவனாகினான் . முக்தி பெற்றான். இறைவன் மனிதனாக உரு மாறினான். மனிதன் இறைவனாகி சுயஉரு பெற்றான் . 
இப்பாடல் சொல்லும் தத்துவங்கள் . . 

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள். இதற்கு உருவமோ, பெயரோ இல்லை . இது ஓர் இறைக் கொள்கை. 

கடவுளை ஓ என்றும் ஓங்காரம் அல்லது ஓம் என்றும் சித்தர்கள் சொல்கிறார்கள் . ஓம் பெருவெடிப்பாகியது இதுவே விரிவு அடைந்து அகார உகார, மகார நாத , விந்து ஆகி , பின்பு பஞ்ச பூதமாகி பிரபஞ்சம் உருவானது. இது சித்தர்கொள்கை. 

வேதங்களும் புராணங்களும் இதைச் சொல்கின்றன . ஓம் என்ற பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானது என்கிறார் அகத்தியர் .
இன்று பூமி உருவாக்கும் ஓசை ஓம் என்று அறிவியலார் சொல்கிறார்கள் 

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “ ஓர் உருவம் ஒர்நாமம் இல்லானை ஆயிரம் நாமம் சொல்லி தெல்லேலம் கொட்டாமோ “என்றார். 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றேபுகும் கதி இல்லை நுஞ்சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே
 

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2104 


“ஒருவன் என்றே தெய்வத்தை வணங்கவேண்டும்” 

அகத்தியர் ஞானம் 9 பாடல் 4 


இந்த ஓர்இறைக் கொள்கையை கிறித்துவமும் , இஸ்லாமியமும் சொல்கின்றன .
ஆயினும் மனிதன் வேறு, இறைவன் வேறு என்கின்றது . . இது துவைத கொள்கை ..பக்தியோக நிலையில் கடைபிடிப்பது . 

கடவுள் தனது அருளால் தனது ஒரு அம்சத்தை (சக்தியை) பிரபஞ்சமாக விரிவடையச் செய்தார்.(இறைவனின் மாறுபட்ட தோற்றம் மனிதன்) பிரபஞ்சத்தின் உயர் அங்கம் மனிதன் . . பிரபஞ்ச மறைப்பில் இருந்து மனிதன் விடுபட்டு மீண்டும் இறைவனாகிறான் . பிரபஞ்ச மறைப்பு அல்லது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் தடை மாயை என்கிறார்கள் வேதாந்திகள் .. உலக மாயையில் இருந்து விடுபட்டு மனிதன் இறைவனாகிறான் . இது அத்வைதம் மற்றும் வசிஷ்டா அத்வைத கொள்கைகள் .
இக்கருத்தை வேதங்களும் சொல்கின்றன (ரிக்வேதம் புருஷ சூக்தம் 10:8 90 ) 
“இப்பிரபஞ்சம் முழுவதும் எனது ஒரு அம்சத்தால் வியாபித்து உள்ளேன் “ கீதை 10.24 


பிரபஞ்ச உற்பத்தியில் பரிணாம வளர்ச்சியே மனிதன் . கடவுள் நேரடியாக மனிதனைப் படைக்கவில்லை . அனைத்துச் சித்தர்களும் இதைச் சொல்லி உள்ளார்கள். இன்றைய அறிவியல் இதை உறுதி செய்கிறது. 

இக்கருத்துகளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்லியுள்ளார் 
“புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி 
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி 
கல்லாய் மனிதராய் “ என்றார் . 


தன்னை கடவுளின் ஒரு அம்சம் என்று உணர்ந்த மனிதன் யோகா வழியில் கடவுளை ஒளிவடிவில் தன்னுள் காண்கிறான் . தன்னுள் கண்ட கடவுளை நோக்கி பயணித்து பல படித்தரங்களை தாண்டி இறைவனுடன் ஒன்றி தானே இறைவன் என்ற நிலை அடைகிறான். இது சித்தர் கொள்கை .

இதை சித்தர்கள் “ தான் அவன் ஆதல் “ என்றனர் “நான் சிவனானேன் “ என்கிறார் திரு மூலர் 
வேதங்கள் இதை உறுதி செய்கின்றன.
யஜூர்வேதம் ஸ்ரீ ருத்ரம் (8. 1) சொல்வது “நம: சிவாய சிவதராய “ சிவம் தன்னை அடைந்தவனை சிவமாக “சிவதரன் “ ஆக மாற்றுகிறது.
“சிவோகம் “ என்றால் நான் சிவன் என்ற பொருள்தரும் . 

இக்கருத்துகளை வேதங்கள் மகாவாக்கியங்களாக சொல்கின்றன. 

ப்ரஜ்ஞானம ப்ரஹம்ம ( ரிக்வேதம் ) =இறைவன் ஞானத்தால் அறியப்படுபவன் .
அஹம் ப்ரஹமாஸ்மி ( யசுர் வேதம் ) நான் இறைவனாய் இருக்கிறேன் . .
தத் த்வம் அஸி (சாம வேதம் ) நீ அதுவாய் ( கடவுளாய் ) இருக்கிறாய் 

அயமாத்மா பரம்மா ( அதர்வண வேதம் ) 
தனது ஆத்மாவே இறைவன் 


ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம் .
கடலில் இருந்து ஒருபகுதி நீர் ஆவியாகி மழையாகி பல நிலைகளை கடந்து மீண்டும் கடலுக்கு வருகிறது .

அது போன்று இறைசக்தியின் ஒரு பகுதி தூண்டுதல் இன்றி பிரபஞ்சமாக விரிகிறது .பின்பு அப்பிரபஞ்சம் மீண்டும் இறைசக்தியில் ஒடுங்குகிறது இது இறைசக்தியின் தன்மையால் தானே நிகழ்கிறது .இதற்கு நோக்கமோ குறிக்கோளோ இல்லை. இதை நைமித்திக பிரளயம் என்கிறது வேதம். 

மனிதனுள் இருக்கும் இறைசக்தி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்தைத் தேடி பயணப்படுகிறது . இது முக்தி பயணம்.முடிவாக இறைவனை அடைகிறது . அதுவே முக்தி என்று சித்தர்கள் சொல்கிறார்கள் . வேதங்களும் உறுதி செய்கிறது . இது ஆதஅந்திய பிரளயம் ஆகும் . 
இன்றைய அறிவியல் ( Stephen Hawkings ஹாகின்ஸ் )இந்த கோட்பாட்டை சிங்குலாரிட்டி என்று சொல்கிறது . பிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து விரிந்து உருவாகிறது . மீண்டும் சுருங்கி அப்புள்ளியாக மாறுகிறது. 

1.5 மனித பிறவியின் குறிக்கோள் எது? 

பெறுதற்கறிய பிறவியை பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார் 
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம் 
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே 

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2109

பெறுதற்கறிய பிறவியை பெற்று உள்ளவன் மனிதன்.
மனிதன் மட்டுமே.பெறுதற்கரிய இறைவன் திருவடியை முயன்று அடையமுடியும் . அப்படி செய்யாத மனிதர் மற்றும் மிருகங்கள் , பெறுதற்கரிய இறைவனின் திருவடி சேரும் முக்தி என்பதை இழந்துவிடுவார்கள் . மனிதப்பிறவியின் குறிக்கோள் முக்தி . எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்வது.

முக்தி - எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்வது 


1.6 கடவுளின் நிலைகள் 
கடவுள்—மனிதன் (பிரபஞ்சம் )—முக்தி தொடர்பு . 


தோன்றிய தொம்பதம் தற்பதஞ்சூழ்தர 
அசிபதம் ஏன்ற அசிபதம் இம்மூண்றோ டேய்தினோன் 
ஆன்ற பராபரமாகும் பிறப்பற 
வேன்றனன் மானச் சிவமா யிருக்குமே

திருமூலர் திருமந்திரம் பாடல் 2437 

தானவ னாகிய தற்பரந் தாங்கினன் 
ஆனவை மாற்றிப் பரமத்தடைந்திடும் 
ஏனை யுயிர் வினைக கெய்து மிடஞ்சென்றும
வானும் நிலனும் புகுந்து வருந்துமே 

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2134 


பிரபஞ்சமாக உருவாகும் முன் இருந்த இறைவன் ஒருவன் . இந்த நிலையில் அவன் தொம்பதம் அல்லாது தொம்பரம் / பரம் / பரமாத்துமன் / ஆதி/ சிவம் அல்லது ஆதி சிவம்/விஷ்ணு/ பரமபிதா அல்லது கர்த்தர் /அல்லா என்று பலவாறாக அழைக்கப்படுகிறான் . 

அவனின் ஒரு அம்சம் உருவமுள்ள பிரபஞ்சமாக மாறும்முன் சக்தி நிலையில் (Energy status) இருக்கிறான் எதிர்மறை சக்திதுகள்( அகாரம்), நேர்மறை சக்தி துகள்(உகாரம்) , மறை ஏற்றம் இல்லா நடுநிலை சக்திதுகள்கள் (மகாரம் ) நேர்மறை உயிர் சக்திதுகள் (நாதம் ) எதிர்மறை உயிர் சக்திதுகள் (விந்து ) என பஞ்ச வித்து நிலையில் உருவற்ற இறைவனாக உள்ளான் அல்லது, இந்த பஞ்ச வித்துகள் என்ற சக்தி நிலையில் கடவுள் நிற்குணபிரம்மம் என்று அழைக்கப்படுகிறான். இதுவே ஆதி சக்தி அல்லது காயத்திரி அல்லது பிரபஞ்சவாலை என்று அழைக்கப்படுகிறது . 

அவன் பிரபஞ்சமாக மாறி 96 தத்துவங்களாக மனிதனாக உருவானபின் அவனுள் இருக்கும் இறைவன் தம்பதம் /தற்பரம்/ வாலை/ என்று அழைக்க படுகிறான் . 

மனிதனின் உடல் அகாரம் உகாரம் மகாரம் என்ற சக்தி துகள்களால் உருவம் பெறுகிறது . நாத விந்து என்ற உயிர்சக்தி, மனிதனுள் உயிர்ஆக உள்ளது. இது ஜீவன் அல்லது உயிர் . உடலையும் உயிரையும் இணைக்கும் சக்தி தற்பரம் என்ற இறைவன் அல்லது சிவம் . இந்த தற்பரம என்ற வாலை ஒளிவடிவில் ஆனந்த மய கோசத்தில் மனிதனிடம் உள்ளது . இதை ஆத்மா என்று சொல்கிறார்கள் .
உயிர் +உடல்+ தற்பரம் (இறைவன் ) ஆகிய மூன்றின் சேர்கை = மனிதன் அல்லது நான் . உடலும் உயிரும் சேர்ந்த ஜீவன் ஆத்மாவுடன் சேர்ந்து ஜீவஆத்மா என்ற மனிதனாகிறான் . 

தன்னுள் இருக்கும் இறைவனை மனிதன் உணராமல் இருக்கக்காரணம் மனிதனின் பிற நான்கு கோசங்கள் . அதாவது அன்னமய கோசம் , பிராணமய கோசம் ,மனோமய கோசம் ஆகியவை . இவற்றைக் கடந்து உள்முகமாக சென்று ஆனந்தமய கோசத்தில் தற்பர தரிசினம் செய்யவேண்டும் . 
தன்னுள் இருக்கும் தற்பரம் என்ற இறைசக்தியை யோகவழியில் பரவெளியில் இருக்கும் தொம்பதம் என்ற இறைவனுடன் ஒன்றச்செய்வது, அசிபதம் என்று அழைக்கப் படுகிறது . 
இது தான் அவன் ஆதல் என்றநிலை. தொம்பதம் , தற்பதம் அசிபதம் ஆகிய மூன்று நிலைகளை அடைந்தவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை . அவன் சிவம் ஆவான் . இது நிலைத்த நிலை யாகும் .. இதுவே முக்தி . 

இந்த நிலைகளை தேடி அடைய வெட்கப்பட வேண்டாம்.
யோக வழியில் மரணத்தை மாற்றி மரணம் இல்லாமல் தானவனாகி இறை நிலை அடைந்தவர்கள் முக்தர்கள் . 

1.6. முக்தி அடையாத மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் மரணத்திற்கு பின் என்னவாகிறார்கள் ?
திருமூலர் சொல்கிறார். 


தானவ னாகிய தர்பரந் தாங்கினன் 
ஆனவை மாற்றிப் பரமத்தடைந்திடும் 
ஏனை யுயிர் வினைக கெய்து மிடஞ்சென்றும
வானும் நிலனும் புகுந்து வருந்துமே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2134 அவர்கள் உடல் அகார உகாரா மகார சக்தி துகள்களாக மாறும் .
உயிர் நாத விந்து என்ற உயிர்சக்தி துகள்களாக மாறும் . 
இவை இரண்டும் பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச வித்துக்களில் சேரும் . . .. உடலையும் உயிரையும் இணைக்கும் தற்பரம் அல்லது இறை அம்சம் அல்லது ஜீவனுடன் இருக்கும் ஆத்மா பரத்துடன் சேரும். மரணித்த மனிதன் அகார உகாரா மகார நாத விந்து வாக மாறி , மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறான் . அதாவது பிரபஞ்சத்தில் இருந்து விடுபடாது பிறவி சுழற்சியில் முக்தி அடையும் வரை சுழன்றுகொண்டு துயர் அடைந்துகொண்டு இருப்பான் . 

1.7 அசிபதம் என்ற முக்தியை பெறுவது எப்படி ? 

தொம்பத மாயையுள் தோன்றிடும் தற்பதம் 
அம்பாறை தன்னில் உதிக்கும் அசிபதம் 
நம்புறு சாந்தியில் நண்னு நண்ணுமவ் வாக்கியம் 
உம்பர் உரைதொந்தத் தசி வாசி யாமே 

திருமூலர் திருமந்திரம் பாடல் 2432

தொம்பதம் தனது மாயா சக்தியால் பிரபஞ்சமாகி மனிதனாகி, தற்பதமாக தோன்றியது . மனிதனுள் இருக்கும் தற்பதம் தொம்பதத்தொடு இணைவதால் உருவாகுவது அசிபதம். இதனால் சாந்தி என்ற பேரின்பம் கிடைக்கும் . . இவ்விதம் மூண்றையும் இணைத்து அசிபதமாக தானவனாக மாறும் தன்மை அல்லது மூன்று பதத்தையும் இணைத்து முக்தி தருவது வாசியோகம் 

முக்தி பற்றி விரிவாக அறிய 
இனி வரும் வீட்டில் வாசியோகம் விளக்கம் -7 பார்க்கவேண்டுகிறேன். 
இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!!