Vasiyogam Overview 7

கடவுள் -மனிதன் - முக்தி (பகுதி 2)

முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் என்ன?முக்தியில் பல பிரிவுகள் உண்டா?முக்தியில் பல நிலைகள் உள்ளதா? முக்தி அடையும் வழி எது ? இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண முயன்றேன்.இவற்றிற்குச் சித்தர்கள் சொன்ன பதிலைச் சொல்கிறேன் .
இதற்கு முதலில் கடவுளும் மனிதனும் பற்றி அறியவேண்டும் . அதற்கு
வீட்டில் வாசியோகம் விளக்கம் --7 பார்க்கவேண்டுகிறேன்.

2. முக்தி கொள்கை


விஞ்ஞானமய கோசத்தைத் தாண்டி மனிதன் ஆனந்தமய கோசத்தில் கண்ட உண்மை தான் முக்தி கொள்கை.
முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் என்ன ? முக்தியில் பல பிரிவுகள் உண்டா?முக்தியில் பல நிலைகள் உள்ளதா ? முக்தி அடையும் வழி எது ?

2.1 முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ?

ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய கடைசிநிலைதான் முக்தி. இந்த கடைசி நிலை எப்படிப்பட்டது என்பதில் பலவித கருத்துகள் உள்ளன . இது கடவுள் கொள்கையை நம்புபவர்களுக்கு மட்டும் பொருந்தும். கடவுள் கொள்கை நம்பாதவர்க்கு மரணமே மனிதனின் முடிவு நிலை.உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் தன்னுள் இருக்கும் இறைசக்தியின் உந்துதலால் முக்தி என்பதை தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் தேடிக்கொண்டு இருக்கிறோம். முக்தி என்பது அனைவருக்கும் உண்டு.

2.2முக்தியின் குறிக்கோள் எது ?
“எல்லாவித துன்பங்களில் இருந்து விடுபட்டு நிலைத்த பேரின்பம் பெறுதல்” என்பது முக்தியின் தன்மை அல்லது நோக்கம் அல்லது குறிக்கோள்.இதை கடவுள் கொள்கையை நம்புபவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.


2.3. முக்தியில் பல பிரிவுகள் உண்டா?

முக்தியில் இரண்டு பெரிய கொள்கைகள் உண்டு .
1. மரணித்த பின்பு முக்தி
2 .மரணிக்காமல் முக்தி


முக்தி என்பது மரணித்த பின்பா அல்லது மரணிக்காமல் இருப்பதா என்பதைப் பொருத்தும் முக்தியின் தன்மை மாறுபடுகிறது. 

2.3.1. மரணித்தபின் முக்தி இரண்டு வகை படும்
1. மரணித்தபின் இறைவன் இருக்கும் இடத்தில் இருந்தால் முக்தி
2. மரணித்தபின் இறைவனுடன் ஒன்றிவிடல் முக்தி


1. மரணித்தபின் இறைவன் இருக்கும் இடத்தில் இருந்தால் முக்தி
தான் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப “மரணித்தபின் இறைவனோடு இருந்து நிலைத்த பேரின்பம் அடைதல் என்பது முக்தி, மோட்சம் , சுவனம், நித்திய ஜீவன் “ .
வேதாந்திகளில் ஒருபகுதியினர் , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் இக்கோட்பாட்டை சொல்கிறார்கள் . இக்கோட்பாட்டின் படி இறைவன் வேறு மனிதன் வேறு . எனவே முக்தியிலும் இறைவனுடன் ஒன்ற முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இருந்து நிலைத்த பேரின்பம் பெறமுடியும்

இக்கோட்பாட்டை நம்புபவர்களில் இரு பிரிவு உண்டு .
2.3.1.1. மரணித்தபின் மறுபிறவி இல்லாமல் இறைவன் இருக்கும் இடத்தில் முக்தி
2.3.1.2. மரணித்தபின் மறுபிறவி பெற்று இறைவன் இருக்கும் இடத்தில் முக்தி


2.31.1. மரணித்தபின் மறுபிறவி இல்லாமல் இறைவன் இருக்கும் இடத்தில் முக்தி
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இறந்தபின் மறுபிறவி இல்லை என்னும் கோட்பாடு உடையவர்கள் . எனவே அவர்கள் இறந்தவர் உடலை பேழையில் பத்திரப்படுத்தி கல்லறையில் வைக்கின்றனர் . நியாய தீர்ப்பு நாளில் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் . அதுவரை கல்லறையில் இருப்பார்கள் .அதன் பின் நியாய தீர்ப்பு வழங்கப்படும் .அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவன் இருக்கும் இடமாகிய சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள்


2.3.1.2. மரணித்தபின் மறுபிறவி பெற்று பாவத்தைப் போக்கி இறைவன் இருக்கும் இடத்தில் முக்தி

இது இந்து வேதாந்திகளில் ஒரு பிரிவு நம்பிக்கை.ஒருவர் செய்த பாவ புண்ணிய ஆன்ம சாதனைக்கு ஏற்ப மரணத்திற்குப்பின் முக்தி அல்லது மறுபிறவி ஏற்படுகிறது . இறந்தபின் ஆன்மசாதனை முடித்த மகான்கள் ஒளிப்பாதை வழியில் தபலோகம், ஜனலோகம் ,மகாலோகம் ஆகிய இடங்களுக்குச் செல்வார்கள் . இவர்கள் மறுபடி பிறப்பதில்லை.

பிறகு மரணித்த பின் புகைபாதை வழியே பிதுர்/ பித்ரு லோகம் மற்றும்
எமலோகம் செல்வார்கள் . அங்கு அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எமதர்மனால் தீர்ப்பளிக்கப்பட்டு சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் .

நரகங்களில் ஏழு வகை உண்டு .அவைகள் ரெளராம் , மகா ரெளரம், வஹ்னி,வைதரிணி,கும்பிபாகம் , தாமசம், தீர்க்க தாமசம். பாவங்களின் தீவிரங்களுக்கு ஏற்ப இந்த நரகங்களுக்குச் சென்று தண்டனை பெறுவார்கள் அங்கு பாப புண்ணிய தீர்ப்புக்கு ஏற்ப சிலகாலம் தங்கி பின்பு அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடி பிறப்பார்கள் .இவ்விதம் பிறந்தவர்கள் தான் செய்த பாவ கர்மங்களுக்கு ஏற்ப புதிய பிறவியில் துயர் அனுபவித்து தனது கர்மங்களைப் போக்க வேண்டும் .அதன்பின் புண்ணியம் செய்து இறைவனிடம் செல்ல வேண்டும் . இதற்குப் பலபிறவிகள் பலவித உயிர்களாக பிறவி எடுக்க நேரிடும்.

இதிலும் சிலர் நம்பிக்கை.மரித்தவர்கள் பிதுர்லோகம் செல்வார்கள் . அவர்களின் பிள்ளைகள் பிதுர் கர்மா என்ற சடங்கு செய்தால் அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்து சுவர்க்கம் செல்லும் என்று தர்ப்பணம் என்ற சடங்கு செய்வார்கள் . இது பிதுர்கர்மம் எனப்படும் .

மொத்தத்தில் மரித்த மனிதன் புண்ணியம் செய்து ஆன்ம சாதனை செய்தால் இறைவன் அருகே துயரம் இன்றி நிலைத்த பேரின்பம் பெற்று முக்தி அடைவான் .. பாவம் அல்லது முற்பிறவி கரும வினை முழுவதும் தொலைத்து புண்ணியம் தேடும் வரை பிறவிகள் தொடரும் .
இவர்களின் நம்பிக்கையின் படி உடல் அழியும். ஆன்மா அழியாது . ஆன்மா புது புது உடல் எடுக்கும் . ஆகையால் உடலை எரித்து சாம்பலை புண்ணிய நதிகளில் கரைத்து பிதுர்கமம் செய்வார்கள் . பிதுர் கர்மம் என்பது இறந்தவரை மோட்சம் செல்ல வைக்கும் சடங்குகள்.
இந்த சடங்குகள் அறிவியல் சார்ந்து இருப்பதில்லை . ஆயினும் இறந்தவரின் ரத்த சொந்தங்கள் தங்களது சோகத்தில் இருந்து மீள உதவும் மனோதத்துவ செயல் முறைகள் .
இதுவரை பேசியது துவைத கொள்கை .
2.3.2. மரணித்தபின் மறு பிறவி பெற்று இறைவனுடன் ஒன்றிவிடல் முக்தி.
இந்த கோட்பாடு இறைவனின் ஒரு அம்சம் பிரபஞ்சமாக, மனிதனாக மாறி உள்ளான் என்ற அத்வைத கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது . இவர்களும் மறு பிறவி ம சுவர்க்கம் ,நரகம் ஆகிய நம்பிக்கை உடையவர்கள். ஆயினும் முக்தி என்பது மரணித்தபின் இறைவனுடன் ஒன்றிவிடுதல் என்பது இவர்கள் நம்பிக்கை .
மேலே சொன்னவைகள் மரணித்தபின் முக்தி என்ற கோட்பாடு . பக்தி மார்க்க கோட்பாடு . வேதாந்த கோட்பாடு.

2.3.2. மரணிக்காமல் முக்தி அல்லது இறுதி முக்தி
மரணத்தை கடந்து மனிதன் தன்னுள் இருக்கும் ஒளிவடிவ இறைவனுடன் ஒன்றுதல் .பின்பு தன்னுள் இருக்கும் இறை சக்தியை பிரபஞ்சத்தில் இருக்கும் இறை சக்தியுடன் இணைக்கச் செய்து தானே இறைநிலையடைந்து இறைவனாக மாறுதல் . இறவாமல் மீண்டும் பிறவாமல் நிலைத்த பேரின்பம் பெறுதல் முக்தி.

இதுவே மரணமில்லா பெருவாழ்வு .. மரணத்திற்கு பின் முக்தி இல்லை . இவை சித்தர் கோட்பாடு .
உடம்புளே உத்தமன் கோவில்கொண்டான்என்
உடம்பிணை யானிருந் தோம்பு கின்றேனே
---திருமூலர் திருமந்திரம் பாடல் 725

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

--திருமூலர் திருமந்திரம் பாடல் 724


உடம்பினுள் (தற்பதம் ) இறைவன் கோவில் கொண்டு உள்ளான் . எனவே உடலை கவனமாக அழியாமல் பாதுகாக்கிறேன்.

உடலானது , உயிரையும் ஆன்மா என்ற தற்பதம் என்ற இறைவனையும் தாங்கி நிற்கிறது . உடம்பு அழிந்தால் உயிரார் என்ற மனிதன் அழிவான் . அதனால் மெய்ஞானம் என்ற முக்தி அடைய மாட்டார் . ஆகையால் ஊடம்பு அழியாமல் வைத்திருக்கும் உபாயம் என்ற அறிவியல் அறிந்து உடல் அழியாமல் பாதுகாக்கிறேன் . அதனால் உயிர் போகாமல் இறைவன் என்னுள் இருக்கிறான் .நான் அவனுடன் சேர்ந்து முத்தி பெறுகிறேன் . இது இறுதி முத்தி.
இதுவே மரணமில்லா பெருவாழ்வு .

முக்தி கோட்பாட்டில் எழும் கேள்விகள்

இந்த எளிமையான முக்தி கோட்பாட்டில் புதைந்துள்ள கேள்விகள். மரணம் என்றால் என்ன? மரணத்தை கடத்தல் என்றால் என்ன ? மரணமில்லா பெருவாழ்வு பெறுவது எப்படி? நிலைத்த பேரின்பம் எது ? முக்தியால் கிடைப்பது என்ன? முக்தியின் நிலைகள் எவை?ஆகியவை


இந்த கேள்விகளுக்கு விடை வரும் பதிவுகளில் பார்ப்போம் .
இறை அருள் பெறுக!!!தான் அவன் ஆகுக!!!