Lesson 9

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வாசி யோகத்தில் நான்காம் அங்கம் வாசிப் பிராணாயாமம். இதைச் சொல்வதற்குமுன் நண்பர்கள் கேட்ட பல சந்தேகங்களை ப் போக்கவேண்டும்.

1. வாசி யோகத்தை வெளிப்படையாகச் சொல்லலாமா ?
2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?
3. வாசியோகம் செய்யத் துறவு அல்லது பிரம்மச்சரியம் அவசியமா .?
இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.
4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?
5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள் .?
 1. வாசியோகத்தை வெளிப்படையாகச் சொல்லலாமா . ?

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பெற்று நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊண்பற்றி நின்றஉணர்வுறு மந்திரம்
தான் பற்ற பற்ற தலைப்படும் . ------------------திருமூலர் திருமந்திரம் பாடல் 85  
இந்த வான்வெளி ஆகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் நான் சேர்ந்ததால்பெற்றது எல்லை அற்றஇன்பம். அதை வேதமாகத் திருமந்திரத்தில் சொல்லி உள்ளேன்.  அதைக் கற்று கடைப்பிடிக்க கடைப்பிடிக்க உங்கள் உடலின் உணர்வுகளில் அந்த இன்பம் தெரியும்.
திருமந்திரத்தில் அஷ்டாங்க யோகம் என்ற siddharyogam.comவாசி யோகமும் வாசி உருவாக்குவதும் இந்த வையகத்தில் உள்ள அனைவர்க்கும் சொல்லப்பட்டது. எனவே நான் அனைவர்க்கும் வெளிப்படையாகச் சொல்வதில் தவறு இல்லை.
காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 .என்ற நூலில் பாடல் 996 & 997 இல் சொன்னது.
உலகோர்க்காய் இன்நூலை உரைத்திட்டேனே
உரைத்திட்டேன் கருக்குருவை வெளியாய் சொன்னேன்
.. சித்தி முத்தி யோக ஞான முறையும்சொன்னேன் ..........
............
நெறிக்கண் திறப்பதற்கு நெறியை சொன்னேன்
குறை நீக்கி நரை மாற்ற முறையும்சொன்னேன் .
பொருள் :
காகபுசுண்டர் தனது பெருநூல் காவியத்தில் வாசி யோகம் செய்வது, நெற்றிக்கண் திறப்பது, உடல் நோய் நீக்குவது,நரை உண்டாக்கும் முதுமை போக்குவது, sidddharyoga.comஅஷ்டமா சித்திகள் அடைவது, ஞானம் பெறுவது, முக்தி அடைவது ஆகியவற்றிற்கான வழிகளை வெளிப்படையாய் சொல்லி உள்ளார். இவற்றை இவ்வுலகில் உள்ள அனைவரும் அறியச் சொல்லி உள்ளார் . எனவே யோகத்தையும் ஞானத்தையும் வெளிப்படையாகச்  சொல்லலாம்.
.
காகபுசுண்டர் எனக்குக் கொடுத்த கட்டளை :
நூல் உனக்கு தருவதை மறைவாய் வைப்பாய்
முறையான சீடருக்கு முழுதும் சொல்லு.
நான் உனக்கு சொல்லிக் கொடுத்த நூலை மறைத்து வை. வாசியோக முறை முதலில் சொல் . வாசியோக முறை கற்றுத் தேறிய முறையான மாணவர்க்கு, சிவயோகமும் நான் நூலில் கூறியது முழுவதும் சொல்.
எனவே நான் அடிப்படை வாசி யோகம் மட்டுமே, வீட்டில் வாசியோகம் தொடரில் சொல்கிறேன்.இது நன்மை தவிர தீமை செய்யாது.

2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?
இதற்கு ஆதிகுருவும்,திருமூலரும்,பதஞ்சலியும் ,திருவள்ளுவரும் சொல்வதைப் பார்ப்போம்.

வாசி யோக மற்றும் சிவயோக சரித்திரம் :
ஆதிசேஷனுக்கு சிவயோகம் கற்க ஆசை வந்தது. அதை விஷ்ணுவிடம் சொன்னார். விஷ்ணு அதற்கு மனிதராய் சிவனிடம் சிவயோகம் கற்று மீண்டும் வைகுந்தம் வா என்று ஆசீர்வதித்தார். அதன்படி பதஞ்சலியாக அவதரித்தார். அவரது உடல் இடுப்புக்குக் கீழ் பாம்பு,மேலே மனித உரு. அவர் ஆதி சிவனிடம் வந்து வேண்டினார். அதன்படி சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்கிய பாதர், நந்திகள் நால்வர் மற்றும் திருமூலர் ஆகிய 8 பேருக்கும் சிவயோகத்தைக் கற்றுக்கொடுத்தார். இதைத் திருமூலர் திருமந்திரம் பாடலில் கூறியுள்ளார்.


நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்ச்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் மாமே
--------------------------திருமந்திரம் பாடல் 67


திருமூலரிடம் காளங்கி எப்படி சிவயோகம் கற்றார் என்பதைப் பார்ப்போம்.


பரியான பரிதலத்தில் பணிந்து நின்று
பார்க்கையிலே திரு மூலர் பாதம் கண்டு
கெதியான மோச்ச மென நிற்கும்போது
கேசரியால் மனோன்மனியாள் கவடை திறந்து
விதியான அமைத்தவிதி எழுத்துகூட்டி
வீடான நவக்கிரகவிவரம் சொல்லி
மதியான தவம் காட்டி ரவியுன்ச் சொல்லி
மார்க்கமுடன் வாசியுடன் வழி சொன்னாரே
-----------------காலாங்கி நாதர் கற்பவிதி 82 பாடல் 2.

மனோன்மணித் தாய் வாழும் வீடான சுழுமுனையில் துரிய தியானத்தில் இருந்தேன். அப்பொழுது திருமூலரின் பாதம் கண்டேன். எனக்கு நற்கதி கிடைக்க மோட்சம் என்ற முக்திக்கு வழி கேட்டேன். அகர உகர ஆகிய எழுத்துகளின் பொருளும் அவற்றைச் சேர்க்கும் முறையும் சொன்னார். நவக்கிரக வீடு என்ற உடல் தத்துவம் 96-இன் விவரம் சொன்னார். வாசி யோகம் செய்யும் வழியும், மதியான தவம் என்ற சிவயோகமும், ரவி என்ற முப்பூ மார்க்கமும் சொன்னார்.
இந்த பாடலில் அறிவது காலாங்கி துரிய தியானத்தில் திருமூலரிடம் கற்றார். ஆனால் நேர்முகமாகக்  கற்கவில்லை.பதஞ்சலி பாடம் சொல்லி கொடுத்ததைச் சொல்லியுள்ளார். இது புராணச்செய்தி.
பதஞ்சலி சிவயோகம் கற்ற பின் வைகுண்டம் செல்ல காலம் வந்தது.  அப்பொழுது மனிதர்களுக்கு சிவா யோகம் கற்று கொடுக்க விரும்பினார் பதஞ்சலி. அவர் ஆதிசேஷன் அவரது பார்வை அல்லது  மூச்சு காற்று பட்டாலே சாதாரண மனிதர்கள் எரிந்து விடுவார்கள். எனவே தன்னை சுற்றி திரை அமைத்து அதனுள் இருந்து மாணவர்களை நேரில் பார்க்காமல் பாடம் சொல்லித் தந்தார். அவரின் சொற்களைக்  கேட்டு மாணவர்கள் படித்தார்கள்.
இது போன்றுதான் .நான் முக நூல் வழி சொல்கிறேன் . அதைப் படிக்கிறீர்கள்.
திருவள்ளுவர் கற்பம் 300 பாடல் 176

கொள்ளுவதற்கு குருவேணும் என்றெண்ணி
யுள்ளங்கலங்க துரைக்க உலகிலுண்டோ
கள்ளமமல்ல கனிந்த குருவாகும் விந்நூல்
வள்ளுவன் மெய் யுரையாய் வையகத்தில் பாடிநேனே 


பொருள் :
கற்றுக் கொள்வதற்கு .குரு வேண்டும் என்று உள்ளம் கலங்க வேண்டாம். இந்நூல் போல் கள்ளம் என்ற மறைப்பு இல்லாமல் சொல்லும் நூல் உலகில் இல்லை. என்னுடைய நூலே முதிர்ந்து பழுத்த குரு என்பதை உண்மையாக உலகிற்குச் சொல்கிறேன் .
எனவே நீங்கள் குரு இல்லை என்று கவலைப் படவேண்டாம் நான் எழுதுவது குருவாக இருக்கும் . .
.3. வாசியோகம் செய்யத்  துறவு அல்லது பிரம்மச்சரியம் அவசியமா .?
இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.

வாசி யோகம் செய்யத்  துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியம் இல்லை.                         

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலாதார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கினால் அசேதனம் மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
--------------திருமந்திரம் பாடல் 2033


கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, உற்று அறியக் கூடிய அஞ்சு புலன்களையும் அடக்கு அடக்கு என்று அறிவு இல்லாதவர்கள் தான் சொல்வார்கள். அவ்விதம் அடக்கிய கடவுள்கூட மேல் உலகில் இல்லை. அவ்விதம் அடக்குவது அறிவுடையது இல்லை (அசேதனம் ) என்று அறிந்தேன். ஆகையால் அஞ்சும் அடக்காமலே முக்திபெறும் அறிவு அறிந்தேன். எனவே முக்தி அடைய . பிரம்மச்சரியம் அவசியம் இல்லை.siddharyogam.com
ஆண் பெண் இணைப்பை கர்ப கிரியை மற்றும் பரியங்க யோகம் என்ற இரண்டு
அத்தியாயங்களில் திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துறை நாடிப
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே
------------------திருமூலர் திருமந்திரம் பாடல் 452 


மூலாதாரத்திற்கு சிறிது மேல், உள்ள ஆண் பெண் குறிகளும் கால்களும் இணைந்து, அங்கி அப்பு என்ற சுக்கிலம் சுரோணிதம் கருப்பையில் பெய்யச் செய்யும் ஞானம் தந்தவன் இறைவன், இதனால் பெண்ணை பத்து மாதம் குழந்தையை கருவில் சுமக்கச் செய்து,குழந்தை பிறக்கவைத்தவன் இறைவன்.ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததி உருவாக்குவது இறைவன் தந்த இயற்கை ஞானம்.


கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வாநீர் உருட்டிட
தண்டோருகாலும தளராது அங்கமே

ஒத்த மனமும் உடலும் கொண்ட கணவனும் மனைவியும் இணைந்து காதல் செய்வது பரியங்க யோகம் . அப்பொழுது உடலிலுள்ள இருவரின் அக்கினி, சூரிய சந்திரமண்டலங்களும் இணைந்து இருவர் உயிர்ச்சக்தியும் பரவெளியில் ஒன்றும். இவ்விதம் வாநீர் என்ற சுக்கில சுரோணிதம் கலப்பதால் இருவர் உடலும் கெட்டுப் போகாது .
விந்து விட்டால் நொந்து கெடும் “.. என்றவாக்கியத்தை மேற்கோள் காட்டி யோகம் செய்ய பிரம்மச்சரியம் வேண்டும் என்பார்கள். அது தவறு. விந்து என்பது தலைக்கு மேல் 4 விரல்கடை உயரத்தில் இருக்கும் சஹஸ்ராரம் அல்லது பிரம்மரந்தரம் என்ற தளம். வாசி யோகம் செய்யும் போது சுழிமுனை என்ற தலைக்கு உள் இருக்கும் இடத்துடன்  வாசி யோகத்தை முடிக்கக் கூடாது. அதற்கு மேல் உள்ள சகஸ்ரார தளமும் ஏறி வாசி யோகம் செய்யவேண்டும்.
இந்த விந்து என்ற சஹாஸ்ராரம் தளம் வரை ஏறி வாசி யோகம் செய்யா விட்டால் யோகா பலம் கெடும். இதுதான்விந்து விட்டால் நொந்து கெடும்என்பதன் பொருள். இதை போகர் 1000 பாடல் 140 இல்
:”தாயென்ற யகாரமாம் சதாசிவன்தான் னொன்று
சார்ந்து நின்ற விந்துவதின் மேலுமமாமே
என்று சொல்லி உள்ளார் .
இல்லறம் பற்றி திருவள்ளுவர் கற்பம் 300 பாடல்கள் சொல்வதை பார்ப்போம்


வாயத்துதைய எந்தனுக்கு மாணவி தானும்
இல்லறமும் துறவறமும் எனக்கே சித்தி
-----------------------------------பாடல் 180


எவர்தேற போறார்கள் என்று எண்ணாதே
மருளாமல் இருப்பவரே பெரியோராகும்
மாதருடன் வையகத்தில் வாழழாமே
-----------------------------------------பாடல் 212 


இணை பிரியாமலே துணை மறவாதே நீ
பிணை வழி மாதர்கள் தனையும் அகற்றிடு
உடை கட்டியே மையல்கள் ஊட்டியே
உலகத்தையே சாம்பல் ஆக்கிடும்
------------------------------------------------பாடல் 214


எனக்கு வாய்த்த மனைவியால் இல்லறத்திலும் துறவறத்திலும் வெற்றி பெற்றேன் .
வாசி யோகம் செய்து கற்பம உண்டு யார் வெற்றி அடைவார்கள் என்று மிரண்டு போகாமல் இருப்பவர் பெரியவர், அத்தகையோர் உலகத்தில் பெண்ணுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை வாழலாம்
உன் மனைவியை மறக்காமல் அவளை விட்டுப் பிரியாமல் இணைந்து வாழ்  
பிணை வழி மாதர் என்ற விலை மாதர்களை நினைவில் இருந்து அகற்று. அவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து கவர்ச்சி காட்டி உலகை சாம்பல் ஆக்குவார்கள்.
வசிச்டருக்கும் விசுவாமித்திரருக்கும் அகத்தியருக்கும் மனைவியுண்டு. இந்துக் கடவுள்களுக்கு மனைவி உண்டு.. எனவே இல்லறத்தில் இருந்து வாசியோகம் செய்வதே சிறப்பு.
4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?
வராது . எந்த அளவு சாதனை செய்தீர்களோ அதற்கு ஏற்ப சக்தியும் சித்தியும் கிடைக்கும். பிற்காலத்தில் வாசி யோகம் தொடரலாம். இதுவே விட்டகுறை தொட்ட குறை.
5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள்.?
திருமணம் ஆன பின்பு சித்தர் நூல்களை படித்து தட்டு தடுமாறி பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தேன். சில ஆண்டுகளில் பிராணாயாம நுணுக்கம் தெரிந்தது . 5 ஆண்டுகளுக்குப்  பின் வாசி இருப்பது தெரிந்தது. அதன் பின் வாசியை பழகினேன் . பலநேரங்களில் சித்தர்கள் கனவில் கற்பித்தார்கள். சிறிது முன்னேறித்  தியானம் வரை அஷ்டாங்க யோகம் கற்றேன். துரிய தியானத்தில் மேல்நிலை வாசியோகம் கற்றுக்  கொடுத்தார்கள். பின்பு அவர்களின் நூலில் கட்டளை கொடுத்தார்கள். காகபுசுண்டர் உங்களுடன் பேசுவதைச்  சொல்கிறார்
.
பாருமே மாலுடனே பிரமனோடு
பகர்தெயிவம் யாவையுமே திறந்து காட்டும்
வாரும்மே அவ்வாசல் வழி நீர்தானே
வந்தாக்கால பேசிடுவோம் வாரும் மென்போம
நீருமே அவ்வாசல் வராவிட்டாலே
நீர் ரென்னை தேடாதீர்
சும்மா நீரே ---------------------------காக புசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல் 


வாசி யோகத்தில் ஆறு தளங்கள் வழி மேலே ஏறி சுழிமுனை திறக்கவேண்டும். அங்கு துரிய தியானநிலை அடையவேண்டும். அப்பொழுது காகபுசுண்டரும் பிற சித்தர்களும் உங்களுடன் பேசுவார்கள். வேறு வழியில் பேசமாட்டார்கள். முயற்சிப்பது வீண்