அன்பர்கள் கருத்து

posted Mar 24, 2017, 2:06 AM by சித்தர் யோகம்
My name is Prem
Wednesday, March 1, 2017
என் இரகசிய வாழ்க்கை - சுருக்கம் - 2017
எனது குழந்தை பருவத்தில்,எனது முதல் குரு எனது கொள்ளு பாட்டி விநாயகர் முருகன் சிவன் என விக்ரஹ வழிபாட்டை சொல்லித்தந்தாள். தர்மம் செய்தால்மட்டுமே இறைவனை நெருங்கமுடியும் என்று என்னை மூளைசலவை செய்துவிட்டாள். இந்த பக்தி மார்க்கத்தில் நான் எனது பதினைந்து வயது வரை எல்லோரையும் போல் சென்றேன்.

எனது பதினைந்தாவது வயதில், வேதாத்திரி மஹரிஷியின் ( அறிவு திருக்கோவில் ) மனவளக்கலை மன்றத்தில் சேர்த்து யோகா மற்றும் தியானம் கற்றுக்கொண்டேன். கடவுளுக்கான ஒரு புதிய விளக்கம் அங்கு எனக்கு கிடைத்தது. அறிவு திருக்கோவிலின் யோகா, அகத்தாய்வு, புறத்தாய்வு மற்றும் காயகல்ப பயிற்சிகள் கற்று "அருட்செல்வர்" என்ற சான்றிதழ் கிடைத்தது. இந்த மகரிஷி யோக மார்க்கத்தில் பத்து ஆண்டுகள் ( எனது இருபத்தி ஐந்து வயது வரை ) இருந்தேன். ஆனாலும் எனக்குள் முழு தெளிவு இல்லை. இன்னும் ஏதோ ஒரு விஷயம் குறைவாக இருப்பதாக உணர்ந்தேன், ஆனால் எது என்று தெரியவில்லை.

எனது இருபத்தி ஆறாவது வயதில், இருசக்கரவாகனத்தில் செல்லும்போது ஒரு விபத்து ஏற்பட்டு பத்து நாட்கள் படுக்கையில் கிடந்தேன். இந்த காலத்தில் ஒரு மனமாற்றம் என்னுள் ஏற்பட்டது. ஒரு மனிதனுக்கு மனமகிழ்வு மிகவும் முக்கியம். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும் கடவுள் மஹாவிஷ்ணுதான் என்று என் மனதில் ஆழமாக தோன்றியது. எனது சகோதரனும் ஆருயிர் தோழனுமான பழனி சிவராமராஜா என்னை முதன்முதலாக திருப்பதி அழைத்துச்சென்றான். திருப்பதி பெருமாளை நெருங்கும்போது பெற்றதாயை வெகுகாலம் பிரிந்துசேர்வதுபோல் அழுகை பீறிட்டது. இரண்டுமணிநேரம் தொடர்ந்து விம்மி அழுதேன். நான் தீவிர விஷ்ணு பக்தனாக ஆனேன். இது என் மனதை மிகவும் மகிழ்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்தது. பல விஷ்ணு கோவில்களுக்கு சென்று வணங்கினேன். விஷ்ணுவின் நூற்றியெட்டு நாமம், ஆயிரத்தியெட்டு நாமம், ஜெப மாலை வைத்து ஓம் நமோ நாராயண என ஜெபித்தல் என்று வாழ்க்கை சிறப்பாக பதினைந்து வருடங்கள் சென்றது. இந்த காலகட்டத்தில் திருமணம், குழந்தைகள், பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு, மேற்படிப்பு (MCA ) மற்றும் பல அயல்நாட்டு பயணங்கள் என அனைத்தும் சிறப்பாக சென்றது. இதே காலகட்டத்தில் இயற்கை உணவுகள் மற்றும் நமது தமிழ் சித்த வைத்திய குறிப்புகளை இணையதளத்தில் நிறைய படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது (siththarkal.com ,  machamuni.com ...). சித்த வைத்திய குறிப்புகளை படிக்கும் போது அகத்திய மஹாமுனிவரை பற்றி படித்தேன். தமிழுக்கு முதல் இலக்கணம் எழுதியவர், சித்த வைத்திய நூல்கள் பல எழுதியவர், வர்மக்கலை மருத்துவம் மற்றும் நோக்கு வர்மத்தை கண்டுபிடித்தவர், ஒலி அலைகள் எப்படி மனதிலும் பிரபஞ்சத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆராய்ந்து பல மந்திர நூல்களை எழுதியவர், இறைவனை நமக்கு உள்ளேயே எப்படி மிகச்சரியாக உணர்ந்து அனுபவிப்பது என பல நூல்கள் எழுதியவர், ரசவாத நூல்கள்  என சொல்லிக்கொண்டே போகலாம். அகத்தியரிடம் எனக்கு பக்தி ஏற்பட்டது. என்னைப்பொறுத்தவரை தமிழை நேசிக்கும் ஒருவனின் முதல் கடவுள் அகத்தியர், தமிழனின் மத வேதநூல் திருக்குறள்.  இந்த காலகட்டத்தில் நான் மாமிசம் உண்பதை முழுதுமாக நிறுத்தினேன். அயல்நாடு பயணத்தில் எவ்வளவு குளிரடித்தாலும் ஒரு துளியும் மது அருந்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன். மாற்றாக திரிகடுகு சூரணம் மற்றும் நிலவேம்பு எடுத்துக்கொண்டேன்.

கடந்த 2014 -2015 ஆம் வருடம் நான் ஜெர்மனில் ஒரு வருடம் குடும்பம் இல்லாமல் தனியாக சமைத்துஉண்டு பணிபுரிந்தேன். இந்த ஒரு வருடம் என் வாழ்வில், அடுத்த பெரிய மாற்றத்தை கொடுத்தது. ஒருமுறை என் நண்பர் தேவராஜ் ஒரு ஜேர்மன் நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்று நீச்சல் கற்று கொடுத்தார். அப்போது அவர் என்னை முடிந்தவரை மூச்சை பிடித்துக்கொண்டு நீருக்குள் அமர்ந்து பயிற்சி எடுக்க அறிவுறுத்தினார். நான் என் வாழ்வில் முதன்முறையாக என் மூச்சை பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் ஐந்து வினாடிகூட மூச்சை பிடித்து நீருக்குள் அமர முடியவில்லை. நான் மிகவும் வருத்தத்தோடு என் அறைக்கு திரும்பிவந்து, மூச்சை பிடித்து நீச்சலடிப்பது எப்படி என்று இணையதளத்தில் தேடினேன். அந்த தேடல் என்னை பிராணாயாமத்திற்கு கொண்டுசென்றது. முதல் தேடல் பதிவாக, எழுத்து சித்தர் பாலகுமாரனின் சிங்கப்பூர் மேடைபேச்சு பிராணாயாமம் பற்றியது வந்ததை கேட்டேன். உடனே அகத்தியரை வணங்கி என் மூச்சை 10 வினாடிகள் பிடிக்க முயற்சித்தேன். மூச்சை பிடிக்கும்போது என் மனதில் பெரிய பெரிய பேய் உருவங்கள் வந்து பயமுறுத்தியது. அகத்தியர் அருளிய ஆஞ்சநேயர் வசியக்கட்டு மந்திரம் தேவையற்ற பயத்தை போக்கியது. என் மூச்சை சிறிது சிறிதாக எண்பது வினாடிகள்வரை அடக்கிக்கொள்ள பயின்றேன். இது என்னை முழுதுமாக பக்திமார்கத்திலிருந்து யோகமார்க்கத்துக்கு கொண்டுசென்றது. நான் ஆறு மாதத்தில் பன்னிரண்டு கிலோ எடை குறைந்தேன். தினமும் நல்ல சுறுசுறுப்பு, மைனஸிலுள்ள கடும்குளிரை எளிதாக தாங்கினேன். ***எச்சரிக்கை: இதைப்படிக்கும் நீங்களும் வழிகாட்டுதல் இல்லாமல் முயற்சிக்கவேண்டாம். இது உங்கள் உயிருக்கு ஆபத்தானது.  இருப்பினும் என் இஷடத்துக்கு மூச்சை அடக்குவது சரியா? என தெரியாமல் சிறிது வருந்தினேன். பக்கவிளைவாக எனக்கு அடிக்கடி வயிற்றில் ஊசியால் குத்துவதுபோன்ற வலி ( சூலை நோய் ) ஏற்பட்டது. இந்த நோய்க்கு தீர்வு என்னவென்று குரு அகத்தியரை தியானம் செய்தேன். இரவு உறங்குமுன் திரிபலா சூரணம், காலையில் ஒரு கட்டி வெண்ணை உண்டேன். ஒரு மாதத்தில் நல்ல பலன்கிடைத்தது, வயிற்று வலி குருவருளால் குறைந்தது.

எனது பிராணாயாமத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியை காண்பிக்குமாறு குரு அகத்தியரை தினமும் வேண்டினேன். குருவருளால் மதுரையில் உள்ள ஒரு பேராசிரியரின் தொடர்பு கிடைத்தது. அவர் தனது இணையதளத்தில் உள்ள "வீட்டில் வாசியோகம்" படித்து பயில சொன்னார். மேலும் அவர் வாசிபிராணாயாமத்தை மூலாதாரத்தில் மட்டும் செய்து இல்லற வாழ்வை நன்கு முழுமையாக அனுபவிக்க அறிவுறுத்தினார்.  இது எனக்கு மிகுந்த புத்துணர்வையும் நிம்மதியையும் தந்தது. விரும்புகிறவர் அவரின் இணையதளம் பார்க்கலாம் ( http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam).

நேரம் கிடைக்குபோதெல்லாம் குருவருளால் யோகமார்கத்தின் பல சித்தர்களின் நூல்கள் படிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. மேலும் அனுபவத்தை சில காலம் கழித்து பதிவிடுகிறேன்.

உங்கள் பிரேம்கலை

Prammenthiran Rajendran at 3:49 AM
Comments